தெலுங்குக்காக ட்ரிம் செய்யப்படும் கேப்டன் மில்லர், அயலான்
ஜனவரி 12 பொங்கலை முன்னிட்டு வெளியான அயலான், கேப்டன் மில்லர் படங்கள் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. படம் வெளியான முதல் மூன்று தினங்களில் தமிழகம் மற்றும் உலக அளவில் கேப்டன் மில்லர் அயலானைவிட சில கோடிகள் அதிகம் வசூலித்து முன்னிலையில் இருந்தது. தற்போது, தினசரி வசூலில் கேப்டன் மில்லரை அயலான் பின்னுக்குத் தள்ளியுள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அயலானுக்கு அளித்து வரும் ஆதரவு இதனை சாத்தியப்படுத்தியுள்ளது.
இவ்விரு படங்களையும் தமிழில் வெளியான அதேநாள் தெலுங்கில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் முக்கிய திரைப்படங்கள் வெளியானதால் கேப்டன் மில்லர், அயலான் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களின் தெலுங்குப் பதிப்பின் வெளியீட்டை ஜனவரி 26 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
கேப்டன் மில்லர் திரைப்படத்துக்குக் கிடைத்த விமர்சனங்களை வைத்து, ஒன்பது நிமிடக் காட்சிகளை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். இந்த ஒன்பது நிமிடக் காட்சிகள் இல்லாமல் கேப்டன் மில்லரின் தெலுங்குப் பதிப்பு வெளியாக உள்ளது. அதேபோல் அயலான் படத்துக்கு கிடைத்த விமர்சனங்களை வைத்து, சுமார் ஆறு நிமிடக் காட்சிகளை குறைத்துள்ளனர்.
ரசிகர்களின் விமர்சனங்களுக்கு செவிசாய்த்து இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளது. இந்த ட்ரிம் செய்த வெர்ஷனே தெலுங்கில் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாக உள்ளது.