தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் படத்திறப்பு!
தேமுதிக நிறுவன தலைவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அவரது படம் திறக்கப்படவுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வருகிற 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தேமுதிக நிறுவனத் தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.