சட்லஜ் ஆற்றில் விழுந்த கார் – அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் எங்கே?
இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில், சட்லெட்ஜ் நதியில் காணாமல் போன அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதிமுக மூத்த தலைவரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசா (Kaza ) நகரில் இருந்து சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். உள்ளூரை சேர்ந்த தன்ஜின் காரை ஓட்டினார்.
சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 200 மீட்டர் ஆழத்தில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியும், ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். இதில் தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சட்லஜ் நதி கடைசியாக சேருமிடமான பக்ரா நங்கல் அணையாகும். விபத்து நடந்த இடத்தில் இருந்து வெற்றி நீரில் இழுத்து செல்லப்பட்டிருந்தால் பங்கரா நங்கல் சென்று சேர 2 நாட்கள் ஆகும். எனவே வெற்றி குறித்த தகவல்கள் தெரிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் கூறினர்.