ஈழத் தமிழர் நலனை புறந்தள்ளுது மத்திய பாஜக அரசு- இரட்டை குடியுரிமை தருக- அதிமுக பொதுக்குழு தீர்மானம்!

ஈழத் தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஈழத் தமிழர் இரட்டை குடியுரிமை தொடர்பான தீர்மான விவரம்: ஈழத் தமிழர் நலன் பாதுகாப்பதில் இன உணர்வோடும் மொழி உணர்வோடும் எப்போதும் அதிமுக திகழ்ந்து வந்திருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் இலங்கைத் தமிழர்களின் நலன் காப்பதில் பல்வேறு வகையில் அக்கறை செலுத்தி வந்துள்ளார்.

நமது தொப்புள் கொடி உறவான தாய் தமிழர்களைப் பாதுகாப்பதில் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு அக்கறை எடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இலங்கையுடன் இந்திய அரசு நல்லுறவைப் பேணுவதற்காக இலங்கை தமிழர்களின் அவல நிலையை கண்டு கொள்ளாமல், நலன்களைப் புறந்தள்ளிய மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

ஈழத் தமிழர்களின் இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்று ஒன்றரை லட்சம் தமிழர்கள் குற்றுயிரும் குலை உயிருமாகக் கொல்லப்பட்டனர். அப்போது திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி திமுகவின் ஆதரவோடு இருந்தது. இந்தக் கூட்டணி நினைத்திருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். நேர்மாறாக போரை நிறுத்தத் தவறியதன் காரணமாக தமிழினம் கொன்று குவிக்கப்பட்டது. இதற்கு காரணம் கூட்டணியில் அங்கம் வகித்த வகித்த கருணாநிதிதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஈழத் தமிழர்களின் வாழ்வில் நிம்மதியும், அவர்களின் உரிமை மீட்டெடுக்கப்படவும் பொருளாதாரத்தில் மேம்படவும், கண்ணியமிக்க சூழ்நிலை உருவாவதற்கும் ஈழத் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குமான சூழ்நிலை தேவை.

2009-ல் ஏற்பட்ட உள்நாட்டு போர் முடிவில், ஈழத் தமிழர்கள் வாழ்க்கை முற்றிலும் சிதைந்த நிலையில் தற்போதும் ஈழத் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெறும் போது தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களைப் பாதுகாக்க, இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை வாழ் ஈழத் தமிழர்கள் கண்ணியமாக வாழ மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முன்னாள் அமைப்பு செயலாளர் பாலகங்கா, அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா, அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் விபிபி பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. விருகை ரவி, அர்ச்சுணன் எம்.எல்.ஏ, தெலுங்கானா மாநில அதிமுக செயலாளர் ஏஏ பாண்டியன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *