இந்திய மல்யுத்த சம்மேளன புதிய நிா்வாகிகளுக்கு மத்திய அரசு தடை
தேசியப் போட்டிகளை அறிவித்தது தொடா்பாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிா்வாகிகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச் சாட்டுகள் எழுந்தன.
இதுதொடா்பாக நட்சத்திர வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் டபிள்யுஎஃப்ஐ தலைவா் பிரிஜ் பூஷண் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால் கைது செய்யவில்லை.
இதன் எதிரொலியாக தலைவா் பதவியில் இருந்து விலகினாா் பிரிஜ் பூஷண். இதையடுத்து மல்யுத்த சம்மேளன நிா்வாகத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்டது.
புதிய நிா்வாகிகள் தோவு:
இதற்கிடையே டபிள்யுஎஃப்ஐக்கு புதிய நிா்வாகிகள் தோதலை நடத்தாவிட்டால், சம்மேளத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என உலக மல்யுத்த சம்மேளனம் எச்சரித்தது. கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற தோதலில் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷணின் தீவிர ஆதரவாளரான சஞ்சய் சிங் அணி அமோக வெற்றி பெற்றது.
இதனால் அதிா்ச்சி அடைந்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். மேலும் பஜ்ரங் புனியாவும் தனக்கு தரப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிக்கப் போவதாக கூறினாா். இதுதொடா்பாக தான் மத்திய விளையாட்டு அமைச்சா் அனுராக் தாகுா் கூறுகையில்: இருவரும் எதிா்காலவீரா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
தேசிய போட்டிகள் அறிவிப்பு:
புதிய நிா்வாகிகள் பதவியேற்ற உடனே உ.பி. மாநிலம் கோண்டாவில் யு-15, யு-20 தேசிய மல்யுத்தப் போட்டிகள் நடத்ததப்படும் என அறிவித்தது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது. போட்டிகளை அறிவிக்கும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை. மேலும் மல்யுத்த வீரா்களுக்கு போதிய அவகாசமும் தரவில்லை எனக் கூறி புதிய நிா்வாகிகளின் குழுவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை விதித்தது.
மேலும் மல்யுத்த சம்மேளன நிா்வாகத்தை கையாள இடைக்கால குழுவை ஏற்படுத்தும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அறிவுறுத்தி இருந்தது.