மத்திய அரசு திட்டங்களை அரசியலாக பார்க்க கூடாது: கவர்னர் தமிழிசை கருத்து

மத்திய அரசு திட்டங்களை அரசியலாக பார்க்காமல், அவசியமாக பாருங்கள் என கவர்னர் தமிழிசை கூறினாார்.

முதலியார்பேட்டை தொகுதியில் மத்திய அரசின் வளர்ச்சியடைந்த பாரதம் வாகன யாத்திரை நிகழ்ச்சி, முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் நடந்தது.

கவர்னர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

நாடு இப்பொழுது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் முடிந்த அளவு வளர்ச்சியை எட்டியுள்ளது. அனைவருக்கும் அடிப்படை வசதிகள் உறுதியாக கிடைக்க துவங்கியுள்ளன.

புகையால் தாய்மார்கள் சிரமப்படுவதை பார்த்த பிரதமர், உஜ்வாலா திட்டத்தை அறிமுகப்படுத்தி, இதுவரை 10 கோடி பெண்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கி உள்ளார்.

ஒரு டாக்டராக நான் வரவேற்றது மருத்துவ காப்பீடு திட்டம். இத்திட்டம் மூலம் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் எனப் பேசினார்.

பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;

நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். புறக்கணிக்கும் எண்ணம் இருந்தால் அதை நீக்க வேண்டும் என்பது எனது கருத்து. இது பிரதமர் மக்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் திட்டம். மாநில அரசு கொடுத்தால் வருவோம், மத்திய அரசு கொடுத்தால் தி.மு.க.வினர் வர மட்டோம் என கூறுவது நியாயம் இல்லை.

இவற்றை அரசியலாக பார்க்காமல், அவசியமாக பார்க்க வேண்டும். ஒரு அரசு மற்றொரு அரசுக்கு கொடுக்கும் நிதியை தடுக்க வாய்ப்பு இல்லை.

மத்திய அரசு நல திட்டங்களை கொடுக்கிறது என்பதற்காக தான் வளர்ச்சி அடைந்த பாரதம் திட்டம் நடக்கிறது. இதனால் மக்கள் பலன் பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரம் இருக்க கூடாது என காவல் துறை அதிகாரிகளிடம் கூறுகிறேன் என கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *