மத்திய அரசின் வசூல் வேட்டை.. 400 சதவீத அதிக வரி வசூல்..!!
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 400 சதவீதம் உயர்ந்து சுமார் ரூ.1,200 கோடியாக உயர்ந்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இ-கேமிங் தளங்களில் மத்திய அரசு 28 சதவீத வரி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் கேமிங் நிறுவனத்தின் கேமிங் தளங்களில் வாடிக்கையாளர்கள் பந்தம் வைக்கப்படும் பெட்டிங் தொகையின் முழு முக மதிப்பின் மீது 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதி விளக்கத்தைக் கொடுத்து, இதை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்தது.
இதேபோல் வெளிநாட்டு இ-கேமிங் நிறுவனங்கள் ஜிஎஸ்டி அமைப்பில் பதிவு செய்யக் கட்டாயமாக்கப்பட்டது. இதைச் செய்யாவிடில் கேமிங் தளங்கள் மூடப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விதியும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.
2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் மத்திய நிதியமைச்சகம் சுமார் ரூ.1.12 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததாகக் அறிவித்து ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அமைப்பு சுமார் 71 ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும் வெளிநாட்டு இ-கேமிங் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு, அதாவது அக்டோபர் 2023 முதல் எந்த வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனமும் இந்தியாவில் புதிதாகப் பதிவு செய்யவில்லை எனவும் ஜிஎஸ்டி வரி அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.