குஜராத்துக்கு நிதியை அள்ளிக்கொடுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்குவதில் ஓரவஞ்சனை: திருச்சி சிவா காட்டம்
தமிழ்நாட்டிற்கு மழை, வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கேள்வியெழுப்பிய எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, குஜராத் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு அள்ளிக் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால், தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியை வழங்குவதில் அரசியல் செய்வதாக கடுமையாக சாடினார்.
மாநில அரசு இடர்பாட்டை எதிர்கொள்ளும்போது உதவிக்கரம் நீட்ட வேண்டிய பெரிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதாகவும் திருச்சி சிவா கூறினார்.