மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறது: டெல்லி போராட்டத்தில் கேரள முதல்வர் விமர்சனம்
மத்திய அரசுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாகக் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை தலைநகர் டெல்லியில் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு நடத்திய “சலோ டெல்லி” போராட்டத்திற்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயனும் வியாழக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். நிதி விவகாரங்களில் மத்திய அரசு தென் மாநிலங்களை புறக்கணிப்பதாகக் கூறி நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், வரிப் பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எங்கள் போராட்டத்தை பதிவு செய்ய வந்துள்ளோம் என்றார்.
அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கின்றது என்றும் கூறினார்.
வருவாய்ப் பகிர்வு இப்போது தலைகீழாக உள்ளது என்ற அவர், செலவுகளில் 65 சதவீதம் வரிச்சுமையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்றும், அதில் 35 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு தருகிறது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
ஜிஎஸ்டி இழப்பீடு குறித்தும் எடுத்துரைத்த பினராயி விஜயன், அதில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். “பல மாநில அரசுகள் ஒன்றாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்தபோதுதான் மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கியது” எனவும் கூறினார்.
முன்னதாக, நிதி பகிர்வு விவகாலரத்தில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடைபெறும் என்று கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு தென் மாநில அரசுகளின் குற்றச்சாட்டை நிராகரித்து, நிதி வழங்குவதில் எந்தவித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என்று கூறிவருகிறது.
டெல்லியில் இன்று நடைபெறும் கேரள அரசின் போராட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.