எதிர்க்கட்சிகளிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி..!
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2 நாட்கள் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய செயற்குழு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் மாநிலங்களை ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தேசிய நிர்வாகிகள், மாநில, மாவட்டத் தலைவர்கள், பல்வேறு அணிப் பிரிவுகளின் தலைவர்கள், தேசிய செயற்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய அமித்ஷா, “அரசியலில் இன்டியா கூட்டணியின் நோக்கம் என்ன? பிரதமர் மோடி சுயசார்பான இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இருக்கிறார். சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவதிலும், சரத் பவார் தன் மகளை முதலமைச்சர் ஆக்குவதிலும் குறிக்கோளாக இருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி தன் மருமகனையும், உத்தவ் தாக்கரே, மு.க. ஸ்டாலின், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தன் மகன்களை முதலமைச்சராக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். குடும்பத்திற்காக ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள், என்றாவது ஏழைகளின் நலனைப் பற்றி சிந்திப்பார்களா?” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.