குன்னூர் நகர்மன்ற தலைவர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை நடத்திய துணைத்தலைவர்- சர்ச்சையும் விளக்கமும்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் நகராட்சியின் தலைவராக திமுக-வின் ஷீலா கேத்ரின் பதவி வகித்து வருகிறார்.
துணை தலைவராக ஆளுங்கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் மகன் வாசிம் ராஜா இருந்து வருகிறார். தந்தை மாவட்ட செயலாளர் என்பதால் தலைவரை ஓரங்கட்டி வருவதாக துணை தலைவர் வாசிம் ராஜா மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், குன்னூர் நகர் மன்றத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.
குன்னூர் நகர் மன்ற கூட்டம்
இந்த கூட்டத்தில் தலைவர் ஷீலா கேத்ரின் பங்கேற்காத நிலையில், துணை தலைவர் வாசிம் ராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. நகர் மன்ற கூட்டத்திற்கு வந்த வாசிம் ராஜா, துணை தலைவருக்கான நாற்காலியில் அமராமல் தலைவர் நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் கூட்டத்திலேயே வாழ்த்து தெரிவித்திருந்தாலும், தலைவர் நாற்காலியில் அமர்ந்து துணை தலைவர் கூட்டத்தை நடத்தியது விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர், “உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை மாதாந்திர கூட்டத்தில் தலைவர் பங்கேற்க முடியாத சூழலில் துணை தலைவர் நடத்தலாம். ஆனால், துணை தலைவருக்கு என்று நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து தான் நடத்த வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால், துணை தலைவர் வாசிம் ராஜா, ஆளுங்கட்சியில் மாநில பொறுப்பில் இருக்கிறார். தந்தை மாவட்ட செயலாளராக இருக்கிறார். இதை சாதமாக எடுத்துக் கொண்டு தலைவர் நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இதைத் தடுக்க வேண்டிய நகராட்சி கமிஷனர் வேடிக்கை பார்த்திருக்கிறார்” என்றனர்.