சந்திரயான் 3 வெற்றி! விண்வெளி துறையில் புதிய சாதனை! இஸ்ரோவுக்கு உயரிய பரிசளித்து கவுரவித்த ஐஸ்லாந்து
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சந்திரயான் 3 உலக சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை பாராட்டும் விதமாக ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு உயரிய பரிசை வழங்கி கவுரவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோக கண்டுபிடித்த நிலையில், அதில் இறங்கி ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக போட்டியிட்டன. இந்நிலையில், சந்திரயான் 3 திட்டம் மூலம், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இது பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது.
இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. அப்படி இருக்கையில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வை தொடங்கியது. அதுவரை இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக பார்த்த உலகம், இந்த வெற்றிக்கு பின்னர் அதன் பார்வையை மாற்றிக்கொண்டது.
நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 3 ரோவர் ஆய்வை மேற்கொள்ள தொடங்கியது. ஆய்வில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.
அதேபோல டைட்டேனியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இரும்பை போல கனமாக இல்லாமல் லேசானதாக இருக்கும். ஆனால் இதன் உறுதி திறன் அபாரமானதாக இருக்கும். எனவே இந்த தனிமத்திற்கு பூமியில் டிமான்ட் அதிகம்.
சல்பரும் வெடி மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை கொண்டு மிக குறைந்த தூரம் செல்லும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில் நிலவை காலணிப்படுத்த முயலும் போது இந்த தனிமங்கள் நிச்சயம் பயன்படும். இதையெல்லாம் கண்டுபிடித்து சொன்ன பின்னர் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் நிரந்தரமாக உறக்க நிலைக்கு சென்றன. விண்வெளி வரலாற்றில் சந்திராயன் 3 படைத்த சாதனைகள் மிகப்பெரியது. இந்த சாதனைக்கு பிறகு சர்வதேச நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இஸ்ரோவுடன் சேர்ந்து பணி செய்ய முன் வந்திருக்கின்றன.
அதேபோல இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாடு உயரிய பரிசை வழங்கி கவுரவித்திருக்கிறது. அதாவது, சந்திரயான்-3 வெற்றியை பாராட்டும் விதமாக ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு ‘2023- லீப் எரிக்சன் லூனார்’ என்ற உயரிய பரிசை வழங்கியுள்ளது. இதனை இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றுக்கொண்டார்.