இந்திய வீரர்களுக்கு செக்.. அஜித் அகர்கர் போட்ட கண்டிஷன்.. இப்போதாவது ரஞ்சி டிராபி அருமை தெரிஞ்சதே!

இனி வரும் காலங்களில் ரஞ்சி டிராபி போட்டிகளில் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் டெஸ்ட் தொடரும் நடைபெற்றது. இதேபோல் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் நடைபெற்று வருகிறது. இந்த இரு டெஸ்ட் தொடர்களுக்கும் தேர்வு செய்யப்படாமல் இருந்த இஷான் கிஷன், ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்கவில்லை.

ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணால் பாண்டியா இருவருடனும் இணைந்து பயிற்சி மேற்கொண்ட இஷான் கிஷன், ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தது ரசிகர்கள் மட்டுமல்லமால் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் வெளிப்படையாகவே இஷான் கிஷனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் பிசிசிஐ மற்றும் தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கர் தரப்பு இணைந்து முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி கிரிக்கெட்டை வேண்டா வெறுப்புடன் இளம் வீரர்கள் அணுகுவதை பிசிசிஐ ரசிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதனால் அடுத்த சில நாட்களில் வீரர்கள் அனைவரும் அந்தந்த மாநில அணிகளுக்காக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள், ஃபிட்னஸ் இல்லாமல் என்சிஏவில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு மட்டுமே ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடுவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சில வீரர்கள் ஜனவரி மாதம் முதலே ஐபிஎல் தொடருக்காக தயாராவதும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதுமே இந்த முடிவுக்கு பின்னுள்ள காரணமாக அமைந்துள்ளது.

புஜாரா, ரஹானே, விஹாரி, சிராஜ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் மூலமாக மட்டுமே இந்திய அணிக்குள் வந்தனர். அதேபோல் அண்மை காலங்களில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இந்திய அணி திணறுவதற்கு ரஞ்சி கிரிக்கெட் விளையாடாததே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இளம் வீரர்கள் அனைவரும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட வைக்கவே பிசிசிஐ மற்றும் அஜித் அகர்கர் தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *