ஹர்திக் பாண்டியாவுக்கு செக்மேட்.. சிவம் துபேவை தனியாக அழைத்து பேசிய ரோஹித் சர்மா.. டீமில் இடம் உறுதி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிவம் துபே ஆடிய ஆட்டம் ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் எதிர்காலத்துக்கு வைக்கப்பட்ட முதல் செக் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறத் துவங்கி உள்ளனர்.
ஹர்திக் பாண்டியா அதிரடி பேட்டிங் திறன் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அது போன்ற திறன் கொண்ட சிறந்த வீரர் யாரும் இந்திய அளவில் இதுவரை கிடைக்காத நிலையில், ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக மாறினர்.
அவரது சிறப்பான செயல்பாடுகள் கைகொடுக்கவே அவர் இந்திய டி20 அணியின் வருங்கால கேப்டனாக பார்க்கப்படுகிறார். அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவால் கேப்டன் பதவியை இழந்த ரோஹித் சர்மா அவருக்கு போட்டியாக சிவம் துபேவை அணியில் சேர்த்து வளர்க்கத் துவங்கி இருக்கிறார் என்ற பேச்சுக்களும் கிளம்பி உள்ளன.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கும் முக்கியமான நான்காம் வரிசையில் ஆல் – ரவுண்டர் சிவம் துபேவை களமிறக்கினார் கேப்டன் ரோஹித் சர்மா. தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சிவம், 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். அத்துடன் வேகப் பந்துவீச்சில் 2 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் என்பதை சிவம் துபே நிரூபித்து இருக்கிறார். இது முதல் அடி தான். சிவம் துபேவின் இந்த நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்துக்கு பின் மைதானத்திலேயே அவரை அழைத்து பேசினார் ரோஹித் சர்மா. அப்போது அடுத்து வரும் போட்டிகளில் எப்படி செயல்படுவது என நாம் தொடர்ந்து பேசுவோம் என அவர் கூறியதாக சிவம் துபே பின்னர் தெரிவித்தார். இதன் மூலம் ரோஹித் சர்மா, சிவம் துபே, தற்காலிகமாக அணிக்கு வந்த வீரர் என நினைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் தன் உடற்தகுதியை நிரூபித்து 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற அவர் திட்டம் போட்டு இருக்கிறார். ஆனால், அதற்குள் அவருக்கு மாற்று வேகப்பந்துவீச்சு ஆல் – ரவுண்டராக சிவம் துபேவை உருவாக்குவதன் மூலம் பாண்டியாவுக்கு அழுத்தம் ஏற்படும். மேலும், சிவம் துபே நிச்சயம் மாற்று வீரராகவாவது 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று விடுவார்.