சென்னை: ரூ.9,20,000 மதிப்பிலான யூரோ கரன்சிகள் வழிப்பறி – போலீஸ் எனக் கூறியவர்கள் சிக்கியது எப்படி?!
சென்னை எழும்பூர், வெங்கி தெருவைச் சேர்ந்தவர் ரியாசுதீன் (55). இவர் money exchange shop நடத்தி வருகிறார்.
கடந்த 4-ம் தேதி 10,000 யூரோ கரன்சிகளை எடுத்துக் கொண்டு பைக்கில் ரியாசுதீன் மண்ணடி நோக்கி சென்றார். சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலை, மாநகராட்சி உயர்நிலை பள்ளி அருகில் ரியாசுதீன் சென்றபோது, அவ்வழியாக மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர், அவரை வழிமறித்தனர்.
பின்னர் ரியாசுதீனிடம் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திய அந்த ஆறு பேரும், அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பேக்கை ஆறு பேரில் ஒருவர் சோதனை செய்தார்.
அதில் யூரோ கரன்சிகள் இருந்தன. அது குறித்து ரியாசுதீனிடம் விசாரித்ததோடு, பணத்துக்கான ஆவணங்களைக் காண்பிக்கும்படி தெரிவித்தனர். அப்போது ரியாசுதீன் ஆவணங்கள் அலுவலகத்திலிருக்கின்றன எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குச் செல்கிறோம். அங்கு ஆவணங்களைக் கொடுத்துவிட்டு, பணத்தை வாங்கிக் கொள்ளும்படி ஆறு பேரும் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டனர். ஆறு பேரும் காக்கி நிற பேன்ட் அணிந்திருந்ததால், அவர்களை போலீஸ் என்றே ரியாசுதீன் கருதினார்.
`நான் போலீஸ், உன்னையக் கொன்னுடுவேன்…!’ – அரைக்கிலோ ஸ்வீட்டால் சிறைக்குச் சென்ற `போலி’ போலீஸ்!
இதையடுத்து ஆவணங்களை எடுத்துக் கொண்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்ற ரியாசுதீன், தன்னிடமிருந்து வாங்கிச் சென்ற யூரோ கரன்சிகளை தரும்படி அங்கிருந்த போலீஸாரிடம் கேட்டார். அதற்கு, `நாங்கள் யாரும் உன்னிடம் பணத்தை வாங்கவில்லை. ஏதோ தவறு நடந்திருக்கிறது’ என்று கூறிய போலீஸார், சம்பவம் நடந்த இடத்துக்கு ரியாசுதீனை அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி-க்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரியாசுதீன் சொல்வது உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து ரியாசுதீனிடம் புகாரைப் பெற்ற சிந்தாதிரிப்பேட்டை போலீஸார், போலீஸ் எனக் கூறி யூரோ கரன்சிகளை வழிப்பறி செய்து சென்ற ஆறு பேரைத் தேடினர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த் லால் (27), வண்டலூர் ஓட்டேரியைச் சேர்ந்த காஜாமொய்தீன் (48) ஆகிய இருவர் சிக்கினர்.
அவர்களிடம் விசாரித்தபோது, ரியாசுதீனிடமிருந்து பணத்தை மிரட்டி வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து பைக்குகள், கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட காஜாமொய்தீன் மீது ஏற்கெனவே இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.
9,20,000 ரூபாய் மதிப்பிலான யூரோ கரன்சிகளை போலீஸ் எனக் கூறி வழிப்பறி செய்த கும்பலின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.