சென்னை: புளியந்தோப்பில் இளைஞர் கொலை – நண்பர்கள் சிக்கிய பின்னணி
சென்னை புளியந்தோப்பு பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சீனு (19). இவரின் நண்பர் சூர்யா. கடந்த 20-ம் தேதி சீனுவை கன்னிகாபுரம் ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு வரும்படி சூர்யா அழைத்திருக்கிறார்.
அதனால் சீனுவும் அங்கு வந்து சூர்யாவை சந்தித்திருக்கிறார். அப்போது சூர்யாவுடன் மணிகண்டன், சாமுவேல் உள்பட சிலர் இருந்தனர். இதையடுத்து அனைவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது சீனுவுக்கும் சூர்யாவுடன் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா தரப்பு கத்தி, பீர் பாட்டிலால் சீனுவைக் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
நீண்ட நேரமாக சீனு வீட்டுக்கு வராததால் அவரை குடும்பத்தினர் தேடினர். அப்போதுதான் சீனு ரயில்வே தண்டவாளம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடக்கும் தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அதனால் சீனுவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்தக் கொலை சம்பவம் குறித்து சீனுவின் அம்மா புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சீனுவைக் கொலை செய்த கும்பலைத் தேடிவந்தனர். இந்த நிலையில் சீனுவைக் கொலை செய்த குற்றத்துக்காக புளியந்தோப்பைச் சேர்ந்த சூர்யா, மணிகண்டன், பல்லு மணி, சாமுவேல் ஆகிய 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணைக்குப்பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்தனர். இந்த கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட சீனுவும் தற்போது இந்த வழக்கில் கைதாகியிருப்பவர்களும் நண்பர்கள்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் உறவினரான கிரி என்பவர் உயிரிழந்தார். அவரின் துக்க நிகழ்ச்சிக்கு சீனு வரவில்லை. அதனால் கிரியின் உயிரிழப்புக்கும் சீனுவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் சூர்யா மற்றும் கிரியின் நண்பர்களுக்கு ஏற்பட்டது.
அதுதொடர்பாக பேச சீனுவை சூர்யா போனில் அழைத்தார். நண்பர் அழைப்பதால் சீனுவும் அங்கு சென்றார். அப்போது கிரி மரணம் குறித்து சீனுவிடம் சூர்யா உள்ளிட்டோர் விசாரித்திருக்கிறார்கள். அதில் ஏற்பட்ட தகராறில்தான் சீனு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மேலும் இருவரை தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.