சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனைப் பேரைக் கொல்லப் போகிறீர்கள் முதல்வரே?-சீமான்

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் கிருஷ்ணமூர்த்தி மறைவு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி, சிறப்பு முகாமில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஈழ உறவான ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனத்துயரத்தையும் அளிக்கிறது.

சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை எடுத்து வந்த நிலையில் அவை தீர்ந்துபோய் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவை கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை அவர் உயிரிழந்திருக்கிறார்.

சிறப்பு முகாம்- கிருஷ்ணமூர்த்தி மரணம்

அதிகாரிகளின் அலட்சியமும், அரசின் மெத்தனப்போக்குமே அவரது உயிரைப் போக்கியிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும். ஏற்கனவே, தம்பி சாந்தன் அவர்கள் பெரும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் உடல் நலிவுக்கு ஆட்பட்டு நாளும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களது இறப்புச்செய்தி சிறப்பு முகாமிலுள்ள உறவுகள் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. ஈழத்தமிழர் எங்கள் இரத்தமென சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பு முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களே! சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்து இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லப் போகிறீர்கள்?

முகாமில் இருந்து உடனடியாக விடிவிக்கனும்

இன்றைக்கு ஐயா கிருஷ்ணமூர்த்தி! நாளைக்கு யார்? ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வேண்டுமென ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் அவர்களை மனித உரிமைகள் அற்ற நிலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு! பேரவலம்! ஆகவே, தம்பிகள் சாந்தன், இராபர்ட் பயஸ், முருகன் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோரை சிறப்பு முகாமிலிருந்து உடனடியாக விடுவித்து,

மாற்றிடத்தில் தங்க வைக்க வேண்டுமெனவும், விரும்பிய நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், வழக்கு முடிந்தும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மற்ற ஈழச்சொந்தங்களையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *