இன்று கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ..!
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் சிறப்பாக நடந்து முடிந்தன. அடுத்தகட்டமாக, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன. கடந்த வாரம் இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு தயாரானது. பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று (24-ந்தேதி) காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை வந்து கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கைத் திறந்து வைத்து புதிய அரங்கில் நடக்கும் போட்டியையும் தொடங்கி வைக்கிறார்.
இதுவரை கம்புகளைக் கொண்டு அமைத்த கேலரிகளில் பொதுமக்கள் தொங்கிக் கொண்டும், பாதுகாப்பு இல்லாமலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒருவித பதற்றத்துடன் பார்த்து வந்தனர். கிரிக்கெட் மைதானம் போல் மிகப் பிரம்மாண்டமாக உயர்தொழில் கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அரங்கில் பார்வையாளர்கள் பிரமாண்ட கேலரிகளில் அமர்ந்து முதல்முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க ஆவலாக உள்ளனர்.
இதற்காக கீழக்கரை கிராமத்தில் 77,683 சதுர அடியில் இந்த அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கலாம். மேலும் இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு தொடர்பான பழங்கால கல்வெட்டுகள் மற்றும் அருங்காட்சியகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் வீரர்களுக்கு காயம் ஏற்படாத வண்ணம் தரையில் தேங்காய் நார்கள் பரப்பி விடப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மட்டுமே அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியும் அரசு சார்பில் நடத்தப்படுவதால் இனி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் 4 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாகப் பார்க்க முடியாத உள்ளூர், வெளியூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட, மாநில மக்கள், வெளிநாட்டினர் இந்த புதிய அரங்குக்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்கலாம்.
கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் வசதிகளை போல் இந்த புதிய என்னென்ன வசதிகள் கிடைக்குமோ? அத்தனை வசதிகளும் இந்த புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் இருந்து இந்த அரங்குக்கு வருவதற்கு பிரத்யேகமான புதிய இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து கீழக்கரை கிராமத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.