இன்று தூத்துக்குடி பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய வியநட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் புதிய மின்கார் தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட்டில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. அங்கு மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் தயாரிக்கப்படுகிறது. சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த தொழிற்சாலை அமைகிறது.
இங்கிருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கு மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க.வினர் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சில்லாங்குளத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது புதிய மின்கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து அவர் அங்கிருந்து புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், சேதமடைந்தவர்கள், மீன்பிடி படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
முதல்வரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதனை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக 5 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.