முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 28-ம் தேதி ஸ்பெயின் பயணம்..!

தமிழகத்தின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து உள்ளார். இதன் பொருட்டு, சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டினை. முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து இரு தினங்களும் பங்கேற்றார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் சர்வதேச பங்குதாரர்களாக தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள். 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்த நிலையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில்,

தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 28-ம் தேதி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்வதுடன் அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்கிறார் என்றார்.

இதற்கான பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் 28-ம் தேதி ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உண்டான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து கூற உள்ளார் என்று தெரிவித்தார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் 5 நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *