கடல்நீரை குடிநீராக்கும் ஆலையினை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003-ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.

தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது. உவர்நீரை வெளியேற்றும் குழாயும் கடலில் பதிக்கப்பட்டன. இது மட்டுமின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது.சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம்மேலிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலையின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இதனால் வருகிற 24-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் தென்சென்னையில் பல்லாவரம் வரை 12 பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்களுக்கு கடல் குடிநீர் வினியோகிக்கப்படும் என்று கூறினார்.

ஏற்கனவே இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப் பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை 2026-ல் முடிக்க பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *