மதுரையில் மனம் குளிர்ந்த எடப்பாடி! 3 கிலோமீட்டர் தூரம் ஸ்தம்பித்த கார்! கூட்டம் ஓட்டாகுமா?

துரை: மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமியால், 3 கிலோமீட்டர் தூரம் இஞ்ச் பை இஞ்சாக நகர்ந்து தான் மேடைக்கு செல்ல முடிந்தது.

அந்தளவுக்கு அவரே எதிர்பார்க்காத கூட்டம் திரண்டிருந்தது.

இதனால் மனம் குளிர்ந்து போன எடப்பாடி பழனிசாமி, தேர்தல் கூட்டணி இட பங்கீடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை விரைவில் எடுப்பார் எனத் தெரிகிறது. இதனிடையே மாநாடுக்கு திரண்ட கூட்டமெல்லாம் ஓட்டாகுமா என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. காரணம், எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அந்த தொண்டர்களின் நண்பர்கள், சுற்றத்தார், கட்சி சாராத இஸ்லாமிய பொதுமக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டத்தில் 1 தொகுதியை எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு அதிமுக ஒதுக்குமா அல்லது சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதியை அதிமுக அளிக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

இதனிடையே எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;

1. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை – சட்டரீதியான விடுதலை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

2. நீட் தேர்வுக்கு விலக்கு – தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.

3. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கான பீக் ஹவர் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

5. சிறுபான்மை முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.

6. சச்சார் கமிட்டி போன்று தமிழக முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய கமிட்டி அமைக்க வேண்டும்.

7. பள்ளிவாசல், தேவாலயம் கட்டும் அனுமதியை எளிமையாக்க வேண்டும்.

8. பல்கலைக்கழக துணை வேந்தர், டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புகளுக்கு சிறுபான்மை சமூகத்தவர்களையும் நியமிக்க வேண்டும்.

9. ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை தொய்வின்றி தொடர வேண்டும்:

10. நில ஒருங்கிணைப்பு சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

11. அரசியல் பழிவாங்கும் ஏவல் கருவியாக மாற்றப்படும் விசாரணை அமைப்புகள்! – கண்டிக்கத்தக்கது

12. சிறுபான்மை வெறுப்பு நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும்.

13. கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் பாஜக அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

14. படித்த இளைஞர்களை ஏமாற்றாமல் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் விரைவாக நிரப்ப வேண்டும்.

15. அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்ட சமவாய்ப்பு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.

16. ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்டு, அதன்மூலம் சிறுபான்மை சமூகம் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *