சீன எவர்கிராண்டே ஆட்டம் முடிந்தது.. நிறுவனத்தை மூட உத்தரவு..!!
சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே பிராப்பர்ட்டி சர்வீசஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் மூடப்பட உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஹாங்காங் பங்குச்சந்தையில் எவர்கிராண்டே பங்கு வர்த்தகம் திங்கட்கிழமை நிறுத்தப்பட்ட உள்ளது.
திடீர் உத்தரவு எதற்காக..? Evergrande Property Services Group Limited இன் பங்குகளின் வர்த்தகம் இன்று காலை 10:19 மணிக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்று ஹாங்காங் பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதன் எலக்ட்ரிக் வாகன கிளை நிறுவனத்தின் வர்த்தகத்தையும் நிறுத்தியது. ஹாங்காங் நீதிமன்றம், பெரும் கடனில் சிக்கியிருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே-வை மூடப்படவும், அதன் சொத்துக்களை விற்றுவிட்டு மொத்த நிறுவனத்தையும் Liquidate செய்யவும் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எவர்கிராண்டே பங்குகள் இன்று காலை சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்த காரணத்தால் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. எவர்கிராண்டே நிறுவனத்தின் கடன் பிரச்சனை, அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையைப் பாதிப்பதைத் தாண்டி சீன பொருளாதாரத்தையும் ஆட்டிவைக்கிறது. ஒரு காலத்தில் சீனாவின் எவர்கிராண்டே தான் அந்நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்தது, ஆனால் இன்று சீன பொருளாதாரத்தின் ஏழரை சனியாக மாறி நிற்கிறது.
எவர்கிராண்டே தனது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்காத காரணத்தால், அதன் மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை, இதனால் இந்நிறுவனம் மூடப்படலாம் என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. எவர்கிராண்டே நிறுவனத்தைக் காப்பாற்றச் சீன அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது, குறிப்பாக் குறிப்பிட்ட அளவிலான நிதி உதவிகளையும், கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தையும் இப்படிப் பல சலுகைகளைக் கொடுத்தது. ஆனால் சீன மக்கள் சொந்த வீடு வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
இதனால் அரசின் சலுகைக்கு எவ்விதமான பயனும் இல்லாமல் போனது, எவர்கிராண்டே சொத்துக்கள் விற்க முடியாமல் தேங்கிக்கிடக்கிறது. இந்த நிலையில் எவர்கிராண்டே வெளிநாட்டில் இருந்து கடனை பெற கடந்த ஆண்டு மார்ச் மாதம் மெகா திட்டத்தைத் தீட்டியது, ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.