சர்வதேச எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டையே கீழே தள்ளிய சீன புத்தாண்டு கொண்டாட்டம்!

பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் மோகம் அதிகரித்திருந்தது. குறிப்பாக அரசாங்கங்களே எலக்ட்ரிக் கார்களை வாங்கி பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் உலகளவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை சரிந்திருப்பது தெரியவந்துள்ளது.

உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பெரிய சந்தையாக இருப்பது சீனா. எனவே சீன பொருளாதாரம் மற்றும் சீன மக்களின் பொருட்கள் வாங்கும் போக்கு ஆகியவை சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் சீனாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனை குறைந்ததால் உலகளவிலான எலக்ட்ரிக் வாகன விற்பனையும் சரிந்துள்ளது.

எலக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ரோ மோஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி உலக அளவில் பிப்ரவரி மாதத்தில் 8 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. விற்பனை சதவிகிதம் என பார்த்தால் ஐரோப்பாவில் கடந்த ஆண்டு பிப்ரவரியை விட இந்த ஆண்டு பிப்ரவரியில் எலக்ட்ரிக் வாகன விற்பனை 12% உயர்ந்துள்ளது.

அதே போல அமெரிக்கா மற்றும் கனடாவில் 31% உயர்வு கண்டுள்ளது. ஆனால் சீனாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனை 12% சரிந்துள்ளது.

சீனாவின் லூனார் புத்தாண்டு கொண்டாட்டங்களே வாகன விற்பனை சரிவுக்கு காரணம் என ரோ மோஷன் நிறுவனம் கூறியுள்ளது. சந்திர புத்தாண்டின் விடுமுறை காலம் பெரும்பாலும் பொருளாதார நடவடிக்கைகளில் மந்தநிலைக்கு வழிவகும். ஏனெனில் வணிக நடவடிக்கைகளுக்கு லீவு விடப்பட்டு, மக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள். இந்த ஆண்டு நிகழ்வு ஆட்டோமொபைல் தொழில் உட்பட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சீனா தான் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை என்பதால் அங்கே விற்பனை சரிந்ததால் உலகளவில் ஒட்டுமொத்த விற்பனையில் அது எதிரொலிப்பதாக விளக்கம் தந்துள்ளது.

சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருந்தது, ஆனால் தற்போது அது குறைந்து வருகிறது. இதற்கு விலை அதிகமாக இருப்பது ஒரு காரணம் என்றும் வாடிக்கையாளர்கள் சற்றே விலை குறைந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்காக காத்திருக்கின்றனர் என்றும் ரோ மோஷன் நிறுவனம் கூறுகிறது.

சீனாவில் அடுத்த சில மாதங்களில் வாகன விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என்றும் இந்த ஆண்டில் எலக்ட்ரிக் வாகன விற்பனை 34% உயர்வு காணும் வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை 25% முதல் 30% வரை வளர்ச்சி அடையும் என ரோ மோஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அரசு கூறி வருகிறது. இதன் காரணமாக டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சீனாவில் குறைந்துள்ளது. மாறாக சீன நிறுவனமான பிஒய்டியின் வாகனங்கள் விற்பனை உயர்ந்து வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *