Chimayi Sripada: ஒரு கேமரா இருந்தால்தான் இவங்க லட்சணம் தெரியுது! ஊழியரை அடித்த பாடகரை சாடிய சின்மயி!
ஊழியரை அடித்தது தொடர்பாக ரஹத் ஃபதே அலி கான் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து அவரை பாடகர் சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஹத் ஃபதே அலி கான்
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகராக அறியப்படுபவர் ரஹத் ஃபதே அலிகான். இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். இவரது இனிமையான குரலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல பாலிவுட் படங்களில் பாடியுள்ள ரஹத், கவ்வாலி பாடகராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் இருந்து மெகா தொடர்களுக்கும் இவர் பின்னணி இசையமைத்துள்ளார். தன் பாடல்களுக்காக பல்வேறு விருதுகளைக் குவித்துள்ள ரஹத் ஃபதே அலிகான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தன்னுடைய வீட்டில் பணியாளரும் படித்துக் கொண்டிருக்கும் மாணவருமான ஒருவரை கடுமையாக தாக்குவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இன்று இணையத்தில் வைரலானது. வீடு போன்ற இடத்தில் பலரும் நிற்கும் நிலையில், ரஹத் ஃபதே அலிகான் அந்த நபரை சரமாரியாக அடிப்பதோடு, கன்னத்தில் அறைவதும், காலணியைக் கொண்டு அந்தப் பணியாளின் தலையிலும் உடலிலும் தாக்கும் காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடிவாங்கும் நபர் தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் நிலையில், ரஹத் அந்த நபரை விடாமல் அடிக்கிறார்.
‘இதனால் தான் அடித்தேன்’
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் எழத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து ரஹத் ஃபதே அலிகான் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவில் அவர் இது ஒரு குருவுக்கு அவரது சீடனுக்குமான நிலவரம் என்று குறிப்பிட்டிருந்தார். ‘ தனது சீடன் நல்லது செய்தால் குரு தனது சீடனுக்கு பாராட்டுக்களை கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் தவறு செய்யும் போது அவர்களை தண்டிக்கிறார்கள் ‘. என்று அவர் பேசியிருந்தார். இந்நிலையில், இந்த வீடியோவை குறிப்பிட்டு பாடகர் சின்மயி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.