மனித மூளைக்குள் சிப்.. வரலாற்றுச் சாதனை படைத்த எலான் மஸ்க்-ன் நியூராலிங்க்..!!
மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு பல முயற்சிகளைச் செய்து வரும் எலான் மஸ்க், அவருடைய வியப்பளிக்கும் வெற்றி பயணத்தில் புதிய மைல்கல்லாக அவருடைய நியூராலிங்க் நிறுவனம் அமெரிக்க அரசின் ஒப்புதலை தொடர்ந்து முதல் முறையாக மனித மூளையில் சிப் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளது.
எலான் மஸ்க் 2016ல் நியூராலிங்க் என்னும் நியூரோடெக்னாலஜி நிறுவனத்தை நிறுவினார், இந்நிறுவனம் மனித மூளைக்கும், கம்ப்யூட்டருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது.
இதன் வெற்றியாக நரம்பியல் தொடர்பான வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் எனக் காட்டியுள்ளார். எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் உருவாக்கியுள்ள சிப் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ALS, Parkinsons போன்ற நரம்பியல் தொடர்பான வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் எனப் பல சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தச் சிப் குரங்குகளுக்கு வைத்துப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் ஆய்வு முடிவுகளை அமெரிக்க FDA அமைப்பிடம் முன்வைக்கப்பட்டுச் சில மாதங்களுக்கு முன் மனித மூளையில் சிப் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நியூராலிங்க் பல கட்ட ஆய்வுகளைச் செய்து ஒரு நோயாளியை தேர்வு செய்தனர்.
தற்போது இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருடைய மூளையில் சிப் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். சிப் வைக்கப்பட்டதில் ஆரம்பக்கட்ட தீர்வுகளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நியூரான் ஸ்பைக் கிடைத்துள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். நியூராலிங்க் உருவாக்கியுள்ள இந்தச் சிப் பெயர் “Link”, இது 5 நாணயங்களை அடுக்கி வைத்தது போல் வடிவத்தில் இருக்கும். கலிப்போர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூராலிங்க் நிறுவனத்தில் இதுவரையில் 400 பேர் பணியாற்றும் வேளையில் 363 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகத் திரட்டியுள்ளது.