சோலி முடிஞ்ச்.. கண்மூடி திறப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி.. இதுதான்டா பேஸ்பால்!
ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 119 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி வெற்றிபெற 231 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.
முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சுப்மன் கில் அதே ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இவர்கள் மூவருமே அறிமுக வீரரான டாம் ஹார்ட்லி பவுலிங்கில் வீழ்ந்தனர்.
பின்னர் இங்கிலாந்து அணிக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அக்சர் படேல் களமிறக்கப்பட்டார். இடதுகை பேட்ஸ்மேன் இருந்தால், ரன்களை எளிதாக சேர்க்க முடியும் என்பதை எண்ணி, ரோகித் சர்மா களமிறக்கினார். இதனால் கேஎல் ராகுல் – அக்சர் படேல் கூட்டணி சிறிது நேரம் பதற்றமின்றி ரன்களை சேர்த்தது.
ஆனால் அக்சர் படேல் திடீரென 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கண்மூடி திறப்பதற்குள் கேஎல் ராகுல் 22 ரன்களிலும், ஜடேஜா 2 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 119 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது. களத்தில் அஸ்வின் மற்றும் கேஎஸ் பரத் இருவரும் மட்டுமே இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.