Christian: ‘கிறிஸ்தவன் என்பதில் பெருமை’: அமைச்சர் உதயநிதி அதிரடி
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
அதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கெடுத்து 2200 பேருக்கு புத்தாடை – அரிசி – மளிகைப் பொருட்கள் – கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை போற்றுவோம். சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.கழகம் என்றும் திகழும்.
நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன். நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்தவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. இஸ்லாமியன் என்று அழைத்தால் இஸ்லாமியன். எனக்கு என்று எந்த ஒரு சாதியோ மதேமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். இதைத்தான் எங்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த இரண்டு மழை வெள்ளப்பாதிப்புகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீள்வதற்கு உடனே நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் நமது முதலமைச்சர் வலியுறுத்தினார். ஆனால் ஒன்றிய அரசு வழக்கம்போல் மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது.
நிதி ஒதுக்கீடு என்று வரும் போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. 2015 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களின் போதெல்லாம் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு கொடுத்தது வெறும் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் தான். அதாவது நாம் கேட்டதில் இருந்து வெறும் 4.6 சதவீதம் தான் ஒன்றிய அரசு நமக்கு கொடுத்துள்ளது.
தற்போது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த அதி கனமழை பாதிப்பை தொடர்ந்து தற்காலிக நிவாரண நிதியாக 7 ஆயிரம் கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12 ஆயிரத்து 659 கோடி ரூபாயும் திமுக அரசு கேட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்டப் பாதிப்புகளுக்கு அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 700 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. வழக்கமாக பேரிடர் வந்தாலும் வராவிட்டாலும், ஆண்டுதோறும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கப்படுகிற இரண்டாம் தவணை 450 கோடி ரூபாயை மட்டும் தான் ஒன்றிய அரசு விடுவித்தது.
குறிப்பாக, 2021-ல் குஜராத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. மறுநாளே அங்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, அம்மாநில அரசுக்கு ரூ.1000 கோடியை ஒன்றிய அரசு சார்பில் அறிவித்தார். மேலும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், தமிழ்நாட்டின் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கேட்ட நிதியையும் வழங்கவில்லை. தமிழ்நாட்டின் பக்கம் அவர் எட்டிப்பார்க்கவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு இந்த எட்டு ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 6000 கோடி ரூபாயைத் தான் ஒன்றிய அரசு தந்திருக்கிறது.
ஆனால், பெரியளவில் பேரிடர் பாதிப்புகளை சந்திக்காத – மக்கள் தொகையில் தமிழ்நாட்டை விட குறைந்த எண்ணிக்கை கொண்ட குஜராத்துக்கு SDRF என்று சொல்லப்படுகிற State Disaster Relief Fund-ல் இருந்து ரூ.8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கொடுத்துள்ளது.
ஆனால், 3 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி கட்டிய மத்திய பிரதேசத்துக்கு 1000 கோடி ரூபாய் State Disaster Relief Fund-ல் இருந்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாடு 5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி கொடுத்துள்ளது. ஆனால், நமக்கு திருப்பி கிடைத்தது வெறும் 2 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், உத்தரபிரதேசம் செலுத்திய வரியே 2 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், அவர்களுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதிக வரி செலுத்துகிற தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியைத் தாருங்கள் என்று தான் கேட்கிறோம். இதைக்கேட்டால், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோபம் வருகிறது. தர முடியாது என்கிறார். பேரிடரே இல்லை என்கிறார். போதாதற்கு எனக்கு மரியாதை பற்றியும் – பாஷை பற்றியும் பாடம் எடுக்கிறார்” எனத் தெரிவித்தார்.