Christmas: ‘அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்’ – ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தியில் அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’ கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் எனதருமை கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

‘உன் மீது நீ அன்பு செலுத்துவது போல, அடுத்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்’ என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவப் பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி வீட்டினை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு கொண்டாடி மகிழ்வார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் திகழும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

‘நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்’ என்ற இயசுேபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *