சினிமாபுரம் – 10 | பாஞ்சாலங்குறிச்சி – உப்புக்கண்ட மணமும், செம்மறி ஆட்டின் முடையும்!

ஊரைப் போல ஒற்றைத் தொடைச் சந்தை மொத்தமாக தொங்க விட்டு வேண்டிய அளவுக்கு வெட்டிக் கொடுப்பது போல இல்லாமல் தொடைக்கறி, இடுப்புக்கறி, நெஞ்சுச்சந்து என வகை வகையாக இரும்புக் கொக்கிகளில் அங்கு தொங்கிக் கொண்டிருந்தன. மகளுக்கு வேண்டியதை கேட்டு அதை எடைபோடச் சொல்லிவிட்டு காத்திருக்கையில் கறித்தோரணங்களுக்கு மத்தியில் கவனம் ஈர்த்தது அந்த வெள்ளைச் சவ் காகித (கேரி பேக்) பொட்டலம்.
அது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டபோது காயவைத்து எடுக்கப்பட்ட குடல் என்றார். “எண்ணெய்ச் சட்டியில் அப்படியே போட்டு வெங்காயம், பச்சை மிளகா கிள்ளிப்போட்டு வறுத்து சாப்பிட வேண்டும்” என்று இலவசமாக செய்முறையும் சொல்லிக் கொடுத்தார். வியாபார யுக்தி! வீட்டுக்கு வந்ததும் “ஏய்… நம்ம ஊரு கொடிக்கறிய (உப்புக்கண்டம்) இங்கே வேற மாதிரி வச்சிருக்காங்க அம்மு!” என மனைவிடம் ஆச்சரியம் பகிர… அன்றைய விடுமுறை நாள் முழுவதும் ஊரின் கரட்டுக்காட்டு செம்மறி முடையுடனும், உப்பேறிய கொடிக்கறியின் மூக்கரையும் மணத்துடனுமே கழிந்தது.
கோயில் கொடையில் வெட்டிய முழு கிடாயை பங்காளிகளுக்கும் பகிர்ந்தது போக மீதமிருக்கும் கறியை நீளமாக துண்டம் போட்டு, கல்லுப்பு, மஞ்சள், கொஞ்சம் வத்தல் பொடி கலந்து தேய்த்து, சணல் கயிறில் கோத்து கொடியாக்கி பாட்டி காயவைத்திருப்பாள். அவளைப் போலவே இன்னும் சிலரும்.