குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயார்: மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வெளியீடு
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கான (சி.ஏ.ஏ) விதிகள், மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மதத் துன்புறுத்தலால் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட (முஸ்லிம்கள் இல்லை) சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை டிசம்பர் 9, 2019 அன்று பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 12, 2019 அன்று மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
இந்திய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகள் ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை மற்றும் விதிகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு மீண்டும் மீண்டும் நீட்டிப்புகளை நாடியது.
தயார் நிலையில் சி.ஏ.ஏ விதிகள்
இந்நிலையில், இந்த விதிகள் இப்போது தயாராகிவிட்டதாகவும், ஆன்லைன் போர்ட்டலும் நடைமுறையில் இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளனர். முழு செயல்முறையும் ஆன்லைனில் இருக்கும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்தும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
“வரும் நாட்களில் சி.ஏ.ஏ-க்கான விதிகளை வெளியிட உள்ளோம். விதிகள் வெளியிடப்பட்டவுடன், சட்டம் செயல்படுத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியும்.” என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக விதிகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “எல்லா விஷயங்களும் நடைமுறையில் உள்ளன. ஆம், அவை தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. விண்ணப்பதாரர்கள் பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆண்டை அறிவிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்த ஆவணமும் கேட்கப்படாது. 2014க்குப் பிறகு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள் புதிய விதிகளின்படி மாற்றப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மற்றொரு அதிகாரி கூறுகையில், “விதிகளை வடிவமைக்க தேதியின் 8 நீட்டிப்புகளை இதுவரை பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க 9 மாநிலங்களின் 30க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் மற்றும் உள்துறைச் செயலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. “என்று கூறினார்.