ரிஷப் பண்ட்டுக்கு நெருங்கும் கிளைமாக்ஸ்.. ஒரே முடிவால் மாறப் போகும் வாழ்க்கை.. மார்ச் 5 அன்று முடிவு
இந்திய வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஓராண்டாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. கார் விபத்தில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட், கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
2024 ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பார் எனவும், அதற்காகவே அவர் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது. ஐபிஎல் தொடரில் பங்கேற்று ரன் குவித்தால் மட்டுமே ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும். இந்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமி ஒப்புதல் அளித்தால் மட்டுமே ரிஷப் பண்ட் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பிசிசிஐ கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி பரிசோதிக்கப்படும். அவரால் சுமார் இரண்டு மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியுமா? விக்கெட் கீப்பிங் செய்ய முடியுமா? என பல விதங்களிலும் உடற்தகுதி பரிசோதிக்கப்படும். அதன் முடிவில் அவர் அவருக்கு முழு உடற்தகுதி இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டால் மட்டுமே அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என கூறப்படுகிறது.
அவரது ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணி, ரிஷப் பண்ட் உடற்தகுதி அறிக்கை கிடைக்கும் வரை அணியின் கேப்டன் யார் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் காத்திருக்க முடிவு செய்துள்ளது. ரிஷப் பண்ட்டிற்கு விளையாட அனுமதி கிடைத்தால் அவரையே கேப்டனாக அறிவிக்க டெல்லி கேபிடல்ஸ் அணி முடிவு செய்துள்ளது.
மார்ச் 5 அன்று ரிஷப் பண்ட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதி பரிசோதனைகளை செய்வார் என தகவல் கிடைத்துள்ளது. அந்த நாளில் கிடைக்கப் போகும் முடிவில் தான் ரிஷப் பண்ட்டின் அடுத்த ஓராண்டு கிரிக்கெட் வாழ்க்கை அடங்கி உள்ளது. 2024 ஐபிஎல் தொடர் மற்றும் முக்கியமான 2024 டி20 உலகக்கோப்பை என இரண்டு பெரிய தொடர்களில் அவர் ஆடினால் ஓராண்டு இழந்ததை அவர் ஓரளவு ஈடுகட்டலாம்.