CM Stalin Global Investor Meet: “முதலீடு மழையாக பெய்யும் என நம்புகிறேன்” – முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை
CM Stalin Global Investor Meet: சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்வது போல, முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலீடு மழையாக பெய்யும் என நம்புகிறேன். பொதுவாக வெளியூர்களுக்கு செல்லும்போது தான் கோட்-சூட் அணிவேன். ஆனால், இன்று அனைத்து வெளிநாடுகளும் இங்கு வந்துள்ளதால் தற்போது நான் கோட்-சூட் அணிந்துள்ளேன். அனைத்து வகை தொழில்களிலும் முன்னேறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிற்கு தமிழ்நாடு பல்வேறு விதங்களில் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். திறமையான தொழிலாளர்கள் இருப்பதால் உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், சிறந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நாடுகள் தமிழ்நாடு அரசுடன் பங்குதாரர்களாக இணைந்துள்ளனர்.
விரைவு பாதையில் தமிழ்நாடு:
பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் தமிழ்நாடு பயணித்து கொண்டிருக்கிறது. இந்த பொருளாதார மாநாட்டின் மூலம் மேலும் பொருளாதாரம் உயரும் என்று நம்புகின்றேன். தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என முதலீட்டாளர்களின் முதல் மாநிலம் என்ற சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது. 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளில் 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியை நாம் இலக்காக கொண்டுள்ளோம். முதலீடு செய்வதற்கான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது
மாநிலத்தின் முதலீடு ஈர்ப்பு திறனை காண்பிக்க இந்த மாநாடு நடைபெறுகிறது. தொழில்மயமாக்கல் அத்தியாயத்தில் மகத்தான வளர்ச்சியாக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளது.
இந்தியாவின் பொருளாதார கொள்கையில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. ஆட்சியின் மீது நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் இங்கு முதலீடுகள் குவிகின்றன” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.