கோயம்புத்தூர் தானுங்க இந்தியாவிலேயே பெஸ்ட்.. காக்னிசென்ட் CEO ரவி குமாரே சொல்லிட்டாரு கேட்டுக்கோங்க
இந்திய ஐடி துறையில் பெரும் அமர்க்களம் செய்து வரும் முன்னணி நிறுவனமான காக்னிசென்ட், யாரும் செய்திடாத வகையில் சக போட்டி நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான உயர் அதிகாரிகளை அதிகச் சம்பளத்தில் பணியில் அமர்த்தி வரும் காரணத்தால் பல நிறுவனத்தில் உயர்மட்டம் ஆட்டம் கண்டு உள்ளது.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிறுவனத்தின் வளர்ச்சி மீது மட்டுமே அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி தனது பணியைச் செய்து வருகிறார் இதன் சிஇஓ ரவிகுமார். பிற ஐடி நிறுவனங்களைப் போலவே காக்னிசென்ட் நிறுவனமும் பெரு நகரங்களைக் கடந்து சிறு நகரங்களுக்குப் படையெடுத்து வருகிறது.
சில நகரங்களில் பெண்கள் முன்னேற்றம் சிறப்பாக இருந்தாலும், இந்திய தொழில்நுட்ப சேவைத் துறையில் பாலின இடைவெளி அதாவது gender gap அதிகமாகவே உள்ளது எனவும் ரவி குமார் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஐடி தொழில்துறை அமைப்பான நாஸ்காம் அறிக்கையின்படி இந்திய தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்பு வெறும் 36% மட்டுமே உள்ளது என விளக்கியுள்ளது.
வேலை மற்றும் வீட்டிலுள்ள பொறுப்புகளைச் சமநிலைப்படுத்துவதற்குப் பெண்களின் பங்கீடு அதிகமாக இருக்கும் சமுகக் கட்டமைப்பால் பெண் ஐடி ஊழியர்கள் மத்தியிலான பணியில் இருந்தும் வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கார்ப்பரேட் ஏணிப் படிகளில் (பதவிகளில்) பெண்கள் உயர இத்தகைய கட்டமைப்புகளும் தடையாக உள்ளது என்றும் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் தெரிவித்தார்.
பாலின பங்கீட்டில், பெண்களின் பங்கை அதிகரிக்க அல்லது மேம்படுத்த எவ்விதமான சிறப்பு ஆயுதமோ அல்லது கட்டமைப்போ கார்ப்பரேட் உலகில் இல்லை என ரவி குமார் கூறியுள்ளார்.
மாதவிடாய் விடுமுறைகள், மகப்பேறு நன்மைகள் மற்றும் பெண்கள் தங்கள் கர்ப்பத்திற்குப் பிறகு வேலைக்குத் திரும்புவதை அனுமதிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது போன்ற கொள்கைகள் வாயிலாகப் பலம் சேர்க்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் கலர் மாறி 20 வருடங்களுக்கு அதிகமாகியுள்ளது, ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல் CSE, IT, ECE எனப் பல பிரிவுகளின் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் கல்வியில் எவ்விதமான சமரசம் செய்யாததன் விளைவு தான். இதனாலேயே பெரு நகரங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் அலுவலகம் அமைக்கத் தயாராக உள்ளது, இதற்குக் காரணம் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் திறன் படைத்த ஊழியர்கள் இருப்பார்கள் என்பது தான்.