கோவை பத்திரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது! தடையை மீறி பெண்களுக்கும் கும்மி ஆட்டத்தைக் கற்பித்தவர்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 87 வயதான வள்ளி ஒயில் கும்மி ஆட்டக் கலைஞர் பத்திரப்பன் நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பத்மஶ்ரீ விருது பெற இருக்கிறார்.
ஆண்கள் மட்டுமே வள்ளி ஒயில் கும்மி ஆட வேண்டும் என்ற பாரம்பரிய கட்டுப்பாட்டை மீறி பெண்களும் வள்ளி ஒயில் கும்மி ஆட்டத்தைக் கற்றுக்கொள்ள பயிற்சி அளித்தவர் பத்திரப்பன். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாட்டுப்புற நடனக்கலையான -வள்ளி ஒயில் கும்மி ஆட்டத்தை பயிற்றுவித்து வருகிறார்.
பத்திரப்பன் முருகன் மற்றும் வள்ளியின் கதைகளைச் சித்தரிக்கும் பாடலுடன் கூடிய நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர். 1958ஆம் ஆண்டு முதல் இந்த நடனக் கலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த வள்ளி ஒயில் கும்மி நடனம் இந்திய வரலாறு மற்றும் புராணங்களைப் பற்றியதாக இருந்தாலும் இது சமூகப் பிரச்சினைகளையும் குறிப்பிடுகிறது.
முக்கியமாக, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த கலை வடிவமாக இருந்தாலும், பத்திரப்பன் இந்தக் கலையை பெண்களுக்கும் கற்பிக்க முன்வந்தார். பெண்கள் மீது நம்பிக்கை வைத்து, காலம் காலமாக இருந்துவரும் கட்டுப்பாட்டை உடைத்து, பெண் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்தார். பத்திரப்பனைப் பாராட்டி 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
ஒரு கலைஞனாக, இந்தக் கலை வடிவத்தை எதிர்கால சந்ததியினருக்குக் கடத்துவதை உறுதி செய்வதும் பாதுகாப்பதும் தனக்கு முக்கியமான பொறுப்பு என்கிறார் பத்திரப்பன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒயில் கும்மி ஆட்டத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார்.
பத்திரப்பன் தமிழகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கலை விழாக்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களில் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கிறார். “எளிமையான கலை வடிவமான இந்த நடனத்திற்கு விசேஷமான ஆடைகள், அலங்காரம் போன்ற தேவை எதுவும் இல்லை. இதில் கலைஞருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் எதுவும் தேவையில்லை. ஒரு மேடைகூடத் தேவை இல்லை” என்கிறார் பத்திரப்பன்.
பத்திரப்பன் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல துறைகளில் தனித்துவமான சாதனைகளை புரிந்த 34 பேர் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் பத்மஶ்ரீ விருது பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.