ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தரவரிசைப் பட்டியல் ரத்து – டிஎன்பிஎஸ்சி

உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடைப்படையில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் மற்றும் அத்தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தெரிவு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண்.10/2022, நாள்: 04.04.2022-இன் மூலம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் (Combined Engineering Services Examination) அடங்கிய பதவிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் (Revised Rank List) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மறுகலந்தாய்வு (Recounselling dates) 03.02.2024 மற்றும் 04.02.2024 ஆகிய இரண்டு நாட்களில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும், சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு எண்.682- 687/2023 மற்றும் வழக்கு எண்.7412/2023, நாள் 20.11.2023-ல் வழங்கிய பொது இறுதியாணையின் அடிப்படையில், முன்னர் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் மற்றும் அத்தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தெரிவு ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கூறிய மறுகலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியாக தபால் மூலமாக அனுப்பப்படமாட்டாது எனவும், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும், திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மறுகலந்தாய்வில் கலந்துகொள்ள தவறும் பட்சத்தில் மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *