வர்லாம் வா.. கூட்டணி கட்சிகளுக்கு தூது.. நாளை கூடும் அதிமுக தொகுதி பங்கீட்டு குழு.. ஆட்டம் ஆரம்பம்!

சென்னை: அதிமுக தொகுதி பங்கீட்டு குழு, நாளை முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து, கட்சிகளுடன் சீட் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில அதிமுகவும், திமுகவும் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன். திமுக இன்று தமது கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவினர் நாளை முதல் முறையாக ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உடன்படிக்கை குறித்து நாளை ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுடன் கடந்த 5 ஆண்டு காலமாக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக, சில மாதங்களுக்கு முன்பாக கூட்டணியை முறித்துக்கொண்டது. இந்நிலையில், புதிய கூட்டணியை வலிமையாக உருவாக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் அணிக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது அதிமுக.

வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி கொண்டுள்ள பாமக, மற்றும் விஜயகாந்த் மறைவால் அனுதாப அலை பெற்றுள்ள தேமுதிக ஆகிய இரு கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால் மேலும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணியை வலுவாக அமைத்துவிடலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுவதாகத் தெரிகிறது.

தற்போதைய சூழலில், அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி கூட்டணியை உறுதி செய்துள்ளது. மற்ற கட்சிகள் இன்னும் பிடி கொடுக்காத சூழலில், அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர், ஒவ்வொரு கட்சியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால், அரசியல் அரங்கில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *