துபாய்-க்கு நிகராக பேன்சி நம்பர் பிளேட்க்கு போட்டி! தெலுங்கானாவில் 0001 பிளேட் விலை என்ன தெரியுமா?!
தெலுங்கானா மாநிலத்தின் வாகனங்களில் பதிவிடப்படும் சுருக்கெழுத்தை ‘TS’ என்பதிலிருந்து ‘TG’ என மாற்றுவதாகக் கடந்த மாதம் மாநில அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே உள்ள தெலுங்கானா வாகனங்களின் பழைய எண் பலகைகளை மாற்ற வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வருகிறது.
புதிய வாகன பதிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ‘TG’ என்ற எண் கொண்ட பலகை வழங்கப்படும். ஆனால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண் பலகைகளை மாற்ற வேண்டியதில்லை. இந்த நிலையில் TG எழுத்துடன் வந்த நம்பர் பிளேட்பெரும் தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு உள்ளது.
பொதுவாகத் துபாய் போன்ற அரபு நாடுகளில் வாகனங்களுக்கு பேன்சி நம்பர் பிளேட் வாங்குவதில் பெரும் போட்டி இருக்கும், ஒவ்வொரு முறையும் ஏலத்தில் வரும் போது பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குவது வழக்கம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் டிரெண்டாகியுள்ளது, சில ஆயிரங்களைக் கொடுத்துப் பிடித்த நம்பர் பிளேட் வாங்குவது இயல்பான ஓன்று தான்.
ஆனால் தெலுங்கானாவில் TG எழுத்துகொண்ட சில பேன்சி நம்பர் பிளேட்-களை 30 லட்சம் ரூபாய்க்கு மக்கள் ஏலத்தில் வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் வாகனங்களில் பதிவிடப்படும் சுருக்கெழுத்தை ‘TS’ என்பதிலிருந்து ‘TG’ மாற்றப்படப்பட பின்பு, TG 09 0001 என்ற எண்ணை சுமார் ரூ.9.61 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டு உள்ளது.
இதேபோல் TG 09 0909, TG 09 0005, TG 09 0002, TG 09 0369, TG 09 0007 ஆகிய எண் பலகைகள் ரூ.2.30 லட்சம், ரூ.2.21 லட்சம், ரூ.1.20 லட்சம், ரூ.1.20 லட்சம் மற்றும் ரூ.1,07 லட்சம் ஆகிய தொகைகளுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் ரூ.30,49,589 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
TS லிருந்து TG க்கு மாற்றம்: 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு, அப்போதைய டி.ஆர்.எஸ் அரசு ‘TS’ என்ற சுருக்கெழுத்தைத் தேர்வு செய்தது. இது குறித்துப் பேசிய அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு, முந்தைய அரசு எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், தங்கள் விருப்பப்படி ‘TS’ என்ற சுருக்கெழுத்தைத் தேர்வு செய்தது எனக் கூறியுள்ளார்.
‘TS’ என்பதை ‘TG’ என மாற்றுவதற்கான முடிவு, முதலமைச்சர் திரு. கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது. இது புதிய வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், ஏற்கனவே உள்ள வாகனங்களின் எண் பலகைகளை மாற்ற வேண்டியதில்லை எனவும் விளக்கம் கொடுத்தார்.