முற்றிய மும்பை இந்தியன்ஸ் மோதல்.. ரோஹித் சர்மாவை அன்ஃபாலோ செய்த ஹர்திக் பாண்டியா.. உண்மை என்ன?
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் விரிசல் இருப்பது இலை மறை காய் மறையாக இருந்து வந்த நிலையில், தற்போது தினமும் ஒரு அதிரடி தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
2023 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மாற்றம் செய்து கொண்டது. அதற்காக சுமார் 100 கோடி வரை குஜராத் அணிக்கு கொடுத்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
அதை அடுத்து ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவும் அறிவித்தது அந்த அணி. கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டார். அதை அவர் விரும்பவில்லை எனவும், அந்த அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், இந்த முடிவை ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்தே செய்தோம் என ஒரு பேட்டியில் கூறினார். அந்தப் பேட்டியில் நிறைய விஷயம் தவறாக இருப்பதாக ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே கூறியதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் விரிசல் வெட்ட வெளிச்சமாக மாறியது.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவை சமூக வலைதளங்களில் அன்ஃபாலோ செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மாவை பின் தொடர்வதை நிறுத்தி இருக்கிறார். அதே போல, ரோஹித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவை அன்ஃபாலோ செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
சிலர் இதற்கு முன் சமூக வலைதளங்களில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பின்பற்றவே இல்லை எனவே, அன்ஃபாலோ செய்யவே முடியாது எனவும் கூறி வருகின்றனர். ஆனால், இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா மனைவியை இன்னும் பின்தொடர்ந்து வருகிறார். அப்படி என்றால் ரோஹித் சர்மாவையும் அவர் பின் தொடர்ந்து இருக்க வேண்டும். தற்போது அவர் அதை அன்ஃபாலோ செய்து இருக்க வேண்டும் எனவும் சிலர் கூறுகின்றனர்.