வெறும் 58 நிமிடங்களில் முடிந்தது பட்ஜெட் உரை
புதுடில்லி: கடந்த 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தபோது, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.
இவர், 2019 – 20ல் துவங்கி, 2023 – 24 வரையில் தொடர்ந்து ஐந்து முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நேற்றைய தினம் அவர் தாக்கல் செய்தது ஆறாவது பட்ஜெட். மிக நீண்ட பட்ஜெட் உரைகளை நிகழ்த்தியவர் என்ற பெருமை நிர்மலாவுக்கு உள்ளது. இவரது 2020 – 21ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை, 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்தது.
இவரது ஆறு பட்ஜெட்களில் இதுவே மிக நீண்ட உரையாக அமைந்தது. நேற்றைய தினம், 58 நிமிடங்களில் தன் பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார்.வழக்கமாக பட்ஜெட் உரையின் போது திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலங்கியங்களில் இருந்து சில வரிகளை மேற்கோள் காட்டும் நிர்மலா, இந்த முறை அவற்றை பயன்படுத்தவில்லை.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது, அமைச்சர் நிர்மலாவுக்கு சர்க்கரை கலந்த தயிரை ஜனாதிபதி ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். இதன்பின் மத்திய அமைச்சரவை கூடி, பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்தது.பட்ஜெட் உரையின் போது, எப்.டி.ஐ., எனப்படும் நேரடி அன்னிய முதலீடு என்ற வார்த்தைக்கு, ‘பர்ஸ்ட், டெவலப் இந்தியா’ என்றும், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதற்கு, ‘கவர்னன்ஸ், டெவலப்மென்ட், பர்பாமன்ஸ்’ என்ற புதிய விரிவாக்கங்களை சமயோசிதமாக நிர்மலா அளித்தார்.