லோக்சபா தேர்தலுக்கான காங். வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 3-வது வாரத்தில் வெளியீடு? காங். செம்ம ப்ளான்!

லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 3-வது வாரத்தில் வெளியிடப்படும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதில் காங்கிரஸ் படு தீவிரமாக உள்ளது. டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி “இந்தியா” கூட்டணியின் கூட்டம் நடைபெறும் நிலையில் திடீரென தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை அதிரடியாக அறிவித்தது காங்கிரஸ்.

டெல்லி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேசிய தலைவர்கள், மாநிலங்களில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். காங்கிரஸ் தரப்பில் ஜனவரி 2-ந் தேதியுடன் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவடைந்துவிடும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பொறுப்பாளர்கள், மேலிடப் பார்வையாளர்களையும் காங்கிரஸ் நியமித்தது. அத்துடன் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை குழுவையும் அறிவித்துள்ளது காங்கிரஸ்.

இதனிடையே ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு பணியும் படுதீவிரமாக நடைபெற்று வருகிறதாம். ஒரு பக்கம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறும் அதே நிலையில் வேட்பாளர்கள் யார்? யார்? என்பதை தேர்வு செய்கிற நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டு கொண்டிருக்கிறதாம். தொகுதி பங்கீட்டு சிக்கல் இருக்கும் சில மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டாலும் பெரும்பாலான மாநிலங்களில் அடுத்து வரும் சில வாரங்களில் வேட்பாளக்ரளை இறுதி செய்தாக வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறதாம்.

லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 3-வது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாம். வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் சூழ்நிலையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ 2-வது யாத்திரையையும் தொடங்குவது எனவும் திட்டமிடப்பட்டு வருகிறதாம். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை, காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிகளின் பலம், பாரத் ஜோடோ யாத்திரை ஆகியவை 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு ஆகக் குறைந்தபட்சம் கவுரவமான எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பெற்றுத் தந்துவிடும் என்கிற நம்பிக்கையில்தான் இத்தனை வேகம் காட்டுகிறார்களாம் அக்கட்சித் தலைவர்கள். இதனால் மாநிலங்களிலும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு விவகாரங்களில் கறார் கெடுபிடி காட்டாமல் இணக்கமாக செயல்படுமாறும் மேலிடம் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *