போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை!
டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கை அதிகமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து 50 கிலோ போதைப் பொருளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு கடத்த முயன்ற மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பவுடருடன் சூடோ பெடரின் எனப்படும் போதை பொருளை கடத்த முயன்றது அம்பலமானது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியில் மையம் அமைத்து வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் நடிகை கயல் ஆனந்தி நடித்து வரும் மார்ச் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் மங்கை என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சித்திக் என்பவரே கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமல்லாது தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியது.
மைதீன் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், சலீம் அரசியல் பிரமுகராக இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மூவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சினிமாவில் முதலீடு செய்து உள்ளார்களா என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்து உள்ளார்கள். மற்றும் சொத்துக்களாக எங்கெங்க சேர்த்து வைத்திருக்கிறார்கள் என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமீர் இறைவன் மிகப் பெரியவன் படத்தை இயக்கி வருவதால் அவருக்கும் இதில் சம்பந்தம் இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. இதனால் இது குறித்த அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
From the Desk Of Actor-Producer-Director #Ameer @directorameer pic.twitter.com/TlJRseqwLJ
— Nikil Murukan (@onlynikil) February 26, 2024
அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!
நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். இறைவன் மிகப் பெரியவன்!” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.