அயோத்தியில் பிரதிஷ்டையாகும் ராம்லல்லா விக்ரகத்துக்கு இவ்வளவு சிறப்புகளா? – சுவாரஸ்யமான 10 தகவல்கள்!

அயோத்தி ராமர் கோயிலில் வரும் திங்கட்கிழமை (22.1.24) அன்று ராம் லல்லா விக்ரகம் பிரதிஷ்டை செய்யபப்ட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான தருணத்தில் அங்கே பிரதிஷ்டையாகும் ராம் லல்லா விக்ரகம் குறித்த அற்புதத் தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.
ராம் லல்லா என்றால், `குழந்தை ராமர்’ என்றுபொருள். ஏழு வயது நிரம்பிய ராமரின் திருவுருவாகவே இந்தத் திருமேனி வடிக்கப்பட்டுள்ளது.தற்போது அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படும் விக்ரகமானது, சுமார் 300 கோடி ஆண்டுகள் பழைமையான பாறையில் இருந்து வடிக்கப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கேகவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து இந்த ராமர் விக்ரகம் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ஶ்ரீராமர்
இந்த விக்ரகத்தின் எடை சுமார் 200 கிலோ. உயரம் 4.24 அடி. அகலம் 3 அடி. நவகிரகங்கள் திருமேனியின் அடிப்பகுதியில் உள்ளன. அதற்கு மேலாக தாமரைப் பீடம் அமைந்துள்ளது. திருமேனியைச் சுற்றிக் கல்லால் ஆன திருவாசியும் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திருவாசியில் அனுமான், ஓம், பிரம்மா, ஓம், பத்மம், சக்கரம், சூலாயுதம், சுவஸ்திக், சிவா, கருடன் போன்ற திருவடிவங்களுடன் தசாவதாரத் திருவுருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. தசாவதாரத் திருக்கோலங்களான மத்சயர், கூர்மர், வராகர், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகியனவும் வடிக்கப்பட்டுள்ளன. புத்தரை தசாவதாரங்களில் ஒருவராகக் குறிப்பிடுவது வடநாட்டு மரபு. ஜெயதேவர் அஷ்டபதியிலும் புத்த அவதாரம் குறித்துப் பாடப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராம் மந்திர், 1000 ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்திருக்கும் தன்மையோடு கட்டப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சேதம் அடையாதபடிக்கு நாகரா கட்டடக் கலையின் மூலம் இண்டெர் லாக்கிங் முறையில் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்திருக்கப்போகும் திருக்கோயிலில் மிகவும் உறுதியாக புதிய திருமேனி செய்யப்பட வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.