அயோத்தி ராமர் சிலைக்கு பிரதிஷ்டை… சிரித்த முகத்துடன் ஜொலிக்கும் அழகிய பால ராமர்
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் இன்று (ஜனவரி 22) கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 5, 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலில் பூமி பூஜை செய்தார். அன்று முதல் கோவில் கட்டும் பணி துவங்கியது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 75 ஆண்டு கால பழமையான ராமர் சிலைக்கு பூஜை செய்த பிறகு புதிய சிலைக்கு பூஜை செய்யப்பட்டது. 51 அங்குலம் கொண்ட இந்த புதிய சிலையின் கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணியை அகற்றி பிரதமர் மோடி சிலையை பிரதிஷ்டை செய்தார்.
தொடர்ந்து ராமரிடம் மனமுருக வேண்டி, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் போது ரகுபதி ராகவ பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரதிஷ்டை விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி அங்கு இருந்த சாதுக்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது சாது ஒருவர் பிரதமர் மோடிக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார்.