தொடரும் பணி நீக்கம்.. பீதியில் ஐடி ஊழியர்கள், புட்டுபுட்டு வைக்கும் சர்வே..!!
அமெரிக்க டெக் துறையில் பணிநீக்கங்களின் சூழல் தொடர்ந்து நீடிக்கிறது. பெரிய நிறுவனங்கள் முதல் புதிதாக துவங்கப்பட்ட நிறுவனங்கள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள நிறுவனங்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. இதனால், லட்சக்கணக்கான டெக் ஊழியர்கள் தற்போது பீதியில் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், சுமார் 193 நிறுவனங்கள் கிட்டத்தட்ட 50,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஏழு நிறுவனங்கள் சுமார் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.
அமெரிக்காவில் இருக்கும் டெக் நிறுவனங்கள் மந்தமான பொருளாதாரத்தை காரணம் காட்டியும், மக்கள் செலவு செய்வதை பெரியளவில் குறைத்துள்ள காரணத்தால் வர்த்தகம் குறைந்துள்ளதை காரணம் காட்டியும், தங்கள் நிறுவன கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான டெக் ஊழியர்கள் எப்போது பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தில் முழ்கியுள்ளனர்.
AuthorityHacker என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, அமெரிக்காவில் 54.58 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் குறித்த அதிகப்படியான அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக டெக் துறையை சேர்ந்த ஊழியர்கள் அதிகப்படியான அச்சத்தில் இருப்பதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையில், ஐ.டி சேவைகள் மற்றும் டேட்டா துறையில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 89.66 சதவீதம் பேர் பணிநீக்கம் குறித்த அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோல் சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறையே சேர்ந்த 74.42 சதவீதம் பேர் வேலை இழப்பு குறித்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த பணிநீக்கத்தின் பெரும் பங்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உண்டு. மேலும் சமீபத்திய வர்த்தக போக்குகள் மற்றும் AI மாடல்களின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், AI வேலைவாய்ப்பு இழப்புக்கு மட்டுமே வழிவகுக்காது, புதிய வகையான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் உலகப் பொருளாதார மன்றத்தின் சமீபத்திய அறிக்கை, 2025 ஆம் ஆண்டளவில் AI மூலம் சுமார் 97 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்று கணித்துள்ளது. இதனால் மக்கல் AI திறன்களுடன் தன்னைத் தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமானதாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு கூறுகிறது.