தொடர் சறுக்கல்… நடிப்புக்கு இடைவெளிவிடும் பிரபாஸ்
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராகிவிட்டார் பிரபாஸ். அனைத்து மொழி ரசிகர்களையும் ஒன்றிணைக்கும்வகையில் அதிரடி ஆக்ஷன் படங்களை தேர்வு செய்து நடித்தார். எந்த நிலப்பரப்பில் இந்தக் கதை நடக்கிறது என்ற குழப்பத்தை இந்த பான் இந்தியா படங்கள் ஏற்படுத்தி, அவற்றுடன் ஒட்டாத அந்நியத்தன்மையை அளித்தன. இதனால், பாகுபலிக்குப் பிறகு அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் படங்கள் வரிசையாக தோல்வி கண்டன. இதில் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் இரண்டும் டிசாஸ்டர் எனும் படுதோல்வியை சந்தித்தன.
பிரபாஸ் அதிகம் எதிர்பார்த்த பிரசாந்த் நீலின் சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தியாவில் சுமார் 600 கோடிகளை இப்படம் வசூலித்ததாக கூறப்பட்டாலும், அவர்கள் எதிர்பார்த்ததில் கால்வாசி கிணறே படம் தாண்டியது. இதனால் கடும் மனஅழுத்தத்தில் பிரபாஸ் உள்ளார்.
அடுத்து பிரபாஸ் நடிப்பில், கல்கி 2898 ஏடி, தெலுங்குப்பட இயக்குநர் மாருதியின் இயக்கத்தில் தி ராஜா சாப், சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இதில் கல்கி படம் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.
தொடர் சறுக்கல் மற்றும் மனஅழுத்தம் காரணமாக பிப்ரவரி மாதம் முழுக்க ஓய்வெடுக்கவும், அடுத்து எதுபோன்ற திரைப்படங்களை தேர்வு செய்வது என்பது குறித்து யோசிக்கவும் திட்டமிட்டுள்ளார் பிரபாஸ். மார்ச் மாதம் முதலே அவர் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
ரோஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு இதுபோன்ற சிக்கல் மணிரத்னத்துக்கும் ஏற்பட்டது. தேசிய அளவில் கவனம் பெற்ற கதைகள் அவருக்கு தேவைப்பட்டன. அதில் பம்பாய் கச்சிதமாக அமைந்தது. தில் சே தோல்வியடைய அலைபாயுதே என்ற தமிழ் நிலத்து கதையின் மூலம் மீண்டார். பிரபாஸும் அப்படியொரு பான் இந்தியா சின்ட்ரோமில் சிக்கியுள்ளார். அதிலிருந்து விரைவில் மீள்வார் என நம்புவோம்.