தொடர்ந்து அதிகரிக்கும் உற்பத்தி செலவுகள்… அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்திய மாருதி சுசுகி!
நாட்டின் மிக பெரிய பேஸஞ்சர் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிட்டட், சமீபத்தில் அதன் அனைத்து கார் மாடல்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் காரணமாக இந்த விலை உயர்வு நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் புத்தாண்டில் கார்களின் விலையை உயர்த்துவது குறித்த தகவலை தெரிவித்திருந்தது. அறிக்கையில் கூறி இருந்ததை போலவே மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆல்டோ கே10 மற்றும் இன்விக்டோ வரை அதன் முழு அளவிலான பேஸஞ்சர் வாகனங்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியுள்ளது.
இந்த நடவடிக்கை அதன் மாடல்களில் சராசரியாக 0.45% வரை விலையை அதிகரிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. சமீபத்திய இந்த விலை உயர்வு விகிதமானது டெல்லியில் உள்ள கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது என்று மாருதி சுசுகி தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன் கடைசியாக ஏப்ரல் 1, 2023 முதல் தனது அனைத்து மாடல் ரேஞ்ச்களிலும் இருக்கும் கார்களின் விலைகளை சுமார் 0.8% வரை உயர்த்தியது மாருதி சுசுகி நிறுவனம். இந்த நிறுவனம் என்ட்ரி-லெவல் சிறிய ஹேட்ச்பேக்கான Alto K10 முதல் பிரீமியம் எம்பிவி-யான Invicto வரை பலவித பயணிகள் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. Arena மற்றும் Nexa போன்ற பல சேனல்கள் மூலம் மாருதி சுசுகி கார்கள் விற்கப்படுகின்றன.
செலிரியோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர் போன்ற அதிகம் விற்பனையாக கூடிய மாடல்களில் Arena கவனம் செலுத்தும் நிலையில் பலேனோ, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி போன்ற ப்ரீமியம் பயணிகள் வாகனங்களை விற்க Nexa முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த விலை உயர்வுக்கு பிறகு மாருதி சுசுகியின் மிகவும் மலிவு விலை காரான Alto K10-வின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் வரை இருக்கிறது. மற்றொரு பிரபல மாடலான மாருதி சுசுகி பிரெஸ்ஸா இப்போது ரூ.8.29 முதல் ரூ.13.98 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்கப்பட்டு வருகிறது. Baleno மாடல் இப்போது ரூ.6.61 லட்சம் முதல் ரூ.9.28 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2024ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே தனது பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்தி இருப்பது மாருதி சுசுகி மட்டுமல்ல. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் பேஸஞ்சர் கார்களின் விலையை உயர்த்தியுள்ளன. மூலப்பொருட்களின் விலை உயர்வால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதாக நிறுவனங்கள் கூறி தங்கள் கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.
விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் என நுகர்வோர் சில கூடுதல் அழுத்தத்தை எதிர்கொண்டாலும், தங்கள் விற்பனை வேகத்தை இவை பாதிக்காது என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நம்புகின்றன. இதற்கிடையே மாருதி சுசூகி நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டில் சுமார் இருபது லட்சத்திற்கும் மேற்பட கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கையில் கடந்த ஆண்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2,69,046 யூனிட்ஸ்களும் அடக்கம்.