இந்த ஆல்டோ காரை ரெட்மி செல்போன் வாயிலாக கன்ட்ரோல் செஞ்சுக்கலாம்! வாயை பிளைக்காதீங்க இன்னும் நிறைய இருக்கு!
மாருதியின் ஆல்டோ கார் டிரைவரே இல்லாமல் இயங்குமா? என்ன இந்த காரை செல்போன் வாயிலாக ஓட்டிக் கொள்ள முடியுமா? இந்த அனைத்தையும் செய்யக் கூடிய காராகவே ஆல்டோவை மாற்றி இருக்கின்றார் இந்தியர் ஒருவர். இந்த மாற்றம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியர்களின், குறிப்பாக, பட்ஜெட் கார் காதலர்களின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகியின் ஆல்டோ இருக்கின்றது. இதன் விலைக் குறைவு, பராமரிப்பு செலவும் மிக மிக குறைவே. மேலும், அதிக மைலேஜையும் இந்த கார் வாரி வழங்கும். இந்த காரணத்தினால் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஆல்டோ முன்னணியில் உள்ளது.
இந்த காரை விலை குறைவாக விற்பனைக்கு வழங்க வேண்டும் என்கிற காரணத்திற்காகவே நவீன கால அம்சங்களை மிகவும் குறைவாகவே ஆல்டோவில் வழங்கி இருக்கின்றது, மாருதி சுஸுகி. அத்தியாவசிய தேவைகளுக்கான அம்சங்களை மட்டுமே இந்த காரில் அது வழங்கி இருக்கின்றது. ஆகையால், ஆடம்பர கார்களில் காணப்படும் நவீன கால அம்சங்களை இந்த காரில் பார்க்க முடியாது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஆல்டோ கார் மாடல் ஒன்று டிரைவரே இல்லாமல் இயங்கும் திறனைப் பெற்றிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ரெட்மி நோட்9 ப்ரோ செல்போன் ஒன்று இருந்தால், அதன் வாயிலாக அக்காரைக் கன்ட்ரோல் செய்துக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகின்றது.
சமீபத்தில்கூட கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டொயோட்டா இன்னோவா காரை டிரைவர் தேவைப்படா வாகனமாக மாற்றி இருந்தார். சோதனை ஓட்டத்தின் அடிப்படையிலே இந்த காரை அவர் தயார் செய்துள்ளார். இந்த நிலையிலேயே ஆல்டோ சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த காரை தயார் செய்தவர் மன்கரன் சிங் ஆவார்.