சிங்கங்களுக்கு சர்ச்சை பெயர் வைத்த வனஅதிகாரி சஸ்பெண்ட்..!

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்காலி சபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. வனவிலங்குகள் பரிமாற்றும் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்திற்கு கொண்டு வரப்பட்ட சிங்கங்களுக்கு, செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் அக்பர், சீதா எனப் பெயரிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது சிங்கங்களுக்கு பெயர் மாற்ற பெங்காலி சபாரி பூங்காவினர் பரிசீலித்து வருகின்றனர்.

முன்னதாக, சிங்கங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியது. தனது மனுவில், சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்த விஸ்வ இந்து பரிஷத், “அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா வால்மீகியின் ராமாயணத்தில் ஒரு பாத்திரம்.

மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். விஸ்வ இந்து பரிஷத் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, உங்களது செல்லப் பிராணிக்கு இந்து கடவுள் அல்லது நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா? என்று மேற்கு வங்க மாநில அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இந்தப் பெயரை யார் வைத்தது? நீங்கள் ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை நானும் ஆதரிக்கவில்லை. அக்பர் மிகவும் திறமையான மற்றும் உன்னதமான முகலாய பேரரசராக இருந்தார். மிகவும் வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசர் அவர். இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம். சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களின் பெயர்களை மாற்றுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை தொடர்ந்து திரிபுரா அரசு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா) பிரபின் லால் அகர்வாலை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அக்பர், சீதா என பெயர் சூட்டியதற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *