சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிஹார் சிறப்பு நீதிமன்றம் சம்மன்
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது, “இந்த மாநாட்டின் தலைப்பை சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பிஹாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை பிஹார் மாநிலம், பாட்னாவிலுள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சரிகா வஹாலியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரும் பிப். 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் அளிக்கலாம் என்றும் நீதிபதி சரிகா வாய்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கு முதலில் பாட்னா விலுள்ள நகர ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த 6-ம் தேதி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பாட்னா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயண், இந்த வழக்கை தொடுத்துள்ளார்.